Monday 5 July 2010

உத்தமர்கள் யார்? என்னையும் நோக்கி கேட்கிறேன்!


எதிரிகள் இல்லாத வாழ்க்கை மிகவும் சோர்வானது. சுவாரஸ்யமற்றது. எங்களுடைய வாழ்க்கை மீதே வெறுப்பு வரவைத்துவிடும். அதனாலேயே, என்னுடைய வாழ்க்கையில் நேர்மையுடன் போராடக்கூடிய எதிரிகள் இருப்பதை விரும்புகிறேன். அந்த எதிரிகளை மிகவும் மதிக்கிறேன். இரகசியமாக ரசிக்கவும் செய்கிறேன்.

அவ்வாறே நானும் பலருக்கு எதிரியாக இருப்பேன். இருக்கிறேன். சிலர் என்னை எதிரியாக நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். எனக்கு தெரியாமலும் நான் பலருக்கு எதிரியாக இருக்கலாம். இது, நடைமுறை உலகில் சாத்தியம்.

சில தருணங்களில் எங்களையே எங்களுக்கு பிடிப்பதில்லை. இதனை அனைவரும் உணர்ந்திருக்கலாம். நாங்கள் செய்கின்ற செயல்கள் பிழை என்று தெரிந்து கொண்டே அதை மீண்டும் மீண்டும் செய்வோம். அதனால், நாங்கள் மட்டுமல்ல பலரும் பாதிக்கப்படுவார்கள். இது பரவலாக நடக்கின்றது. எதிர்காலத்திலும் நடக்கும்.

எங்களை நிலை நிறுத்துவதற்காக நாங்கள் எவ்வளவு முரண்பாடான காரியங்களையெல்லாம் செய்கிறோம். அதனை எங்களை நோக்கி இன்னொருவன் செய்கிற போது எங்களால் தாங்கிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. இது மனித இயல்பு. இது தனி மனிதன் தொடங்கி சமூகம், இனம், பிராந்தியம், மதம் என்று தொடர்கிறது.

அதுபோலவே மத, கொள்கை, சிந்தனைத் திணிப்புக்களை மற்றவர்களிடம் முறையற்று சேர்ப்பிக்கின்ற நிகழ்வுகளும் பொறுப்பற்ற செயலே. அதனை யார் செய்தாலும் தவறானது. அனேக தருணங்களில் அவர்கள் முன்னெடுத்து செல்கிற கொள்களைகள், மதம்- மார்க்கங்கள், சிந்தனைகளில் அவர்களுக்கே நம்பிக்கை இருப்பதில்லை.

மற்றுமொரு முக்கிய விடயம் அந்தரங்கத்தை விமர்சிக்கிற விடயம். தனி மனிதனின் அந்தரங்கத்தை விமர்சிக்கிற உரிமை யாருக்கும் இல்லை. ஏனெனில், மற்றவனின் அந்தரங்கத்தை அறிந்துகொள்ள நாங்கள் காட்டும் ஆர்வம் பல தருணங்களில் முறையற்றது. மற்ற மனிதன் செய்கிற அதே தவறினை பல தடவைகளில் நாங்களும் செய்வோம். ஆனால், அது தொடர்பில் நாங்கள் வெளிக்காட்டிக்கொள்ள விரும்புவதில்லை.


யாரும் முற்றுமுழுதாக உத்தமர்களாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. உலகத்தில் பெரும்பான்மையினரால் மகாத்மாவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காந்திஜீ கூட மில்லியன் கணக்கானவர்களுக்கு எதிரியே. எங்களுக்கு வேண்டுகிற சுதந்திரமும், விடுதலையும் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எத்தனைபேர் உண்மையாக அக்கறைகொள்கிறார்கள்.

பணம், பொருள், புகழ், அதிகாரம் போன்றவை பெற்றுக்கொள்ள அனைவரும் விரும்புகின்றோம். அதனை அடைவதற்காக சிறிய தொகையினரே நேர்மையாக உழைக்கின்றனர். மற்றவர்கள் முறையற்று அதனை அடைவதற்கு முயற்சிக்கின்றோம். இது பரவலாக எங்கும் நடக்கின்றது.

நாங்கள் எங்களின் நேர்மைத் தன்மை குறித்து மற்றவர்களிடம் அபிமானம் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவோம். ஆனால், எங்களிடம் இருக்கிற குறைகள் தொடர்பில் சுயபரிசோதனை செய்துகொள்ள முனைவதில்லை. இதுவே, பல குற்றங்களுக்கும், முறையற்ற செயல்களுக்கும் முக்கிய காரணமாகிறது.

எங்களுடைய பிழைகளுக்கு அல்லது தவறுகளுக்கு காரணங்களை முன்வைத்து செயற்படும் நாம், மற்றவன் பிழை அல்லது தவறு செய்யும் போது அவனது காரணங்களை அறிந்து கொள்ள விரும்புவதில்லை. இதுவும், மற்றவர்களுக்கும், எங்களுக்கும் உண்மையற்று இருக்கிற சந்தர்ப்பங்களே.

அதுபோல, ஒரு மனிதனிடம் சிந்தனை மற்றும் கருத்தியல் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. அந்த மாற்றங்களை மற்றவர்களும் சடுதியாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறானது. இவ்வாறான செயற்பாடுகள் மாற்றுக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத அல்லது உள்வாங்காத நிலைகளைத் தோற்றுவித்து விடும். இது பலருக்கு சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது.

யாரும் முற்றுமுழுதாக உத்தமர்களாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. அப்படி இருக்க குழந்தையாக அல்லது பிணமாக இருக்கவேண்டும். நான் குழந்தையும் இல்லை. பிணமும் இல்லை. ஆக, நானும் உத்தமன் இல்லை!.

No comments:

Post a Comment