Sunday 11 July 2010

நான் செத்து புழைச்சவன்டா..எமனை பார்த்து சிரிச்சவன்டா... - இறந்தவர் உயிர்பிழைத்த அதிசயம்



மதுரை விராட்டிபத்தை சேர்ந்த செல்லமணி என்பவரின் மகன் சிவா (வயது 26) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் என காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காளவாசலில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகாததால் கே.கே.நகரில் உள்ள மற்றொரு தனியார் வைத்தியசாலையில் சிவா சேர்க்கப்பட்டார். அங்கு ஏ/சி. வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 நாட்கள் வரை சிகிச்சை அளித்தும் சிவாவுக்கு நோய் குணமாகவில்லை. மாறாக உடல் சோர்வு அடைந்து மயக்க நிலைக்கு தள்ளப்பட்டார். அங்குள்ள டாக்டர்களிடம் சிவாவின் உடல்நிலை குறித்து கேட்டனர்.

அதற்கு ““ஆபத்தான நிலையில் இருக்கிறார். கோமாவில் இருக்கும் அவருக்கு பொருத்தப்பட்ட சுவாச கருவியை எடுத்து விட்டால் உயிர் பிரிந்து விடும். எனவே உடனடியாக வீட்டுக்கு கொண்டு சென்று ஆக வேண்டிய வேலையை கவனியுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

இதனால் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். வார்டுக்குள் சென்று பார்த்தபோது பேச்சு மூச்சு இல்லாதது போல கிடந்தார். இறந்து விட்டதாக கருதி உடலை வீட்டக்கு கொண்டு சென்றனர். பின்னர் வெளியூரில் வசித்து வரும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் விராட்டிபத்துக்கு வந்தனர். வீட்டில் கிடத்தி போட்டு இருந்த சிவாவின் உடலுக்கு பலர் மாலை அணிவித்தனர். மனைவி மற்றும் நெருங்கிய உறவினர் கதறி அழுதனர். அப்போது ஒரு பெண் ““என் ராசாவே...இப்படி கொஞ்ச வயலிலேயே குழந்தைகளை அனாதையாக விட்டுட்டு போயிட்டியே... ராசா... என்று சிவாவின் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி கதறி அழுதார். அப்போது சிவாவின் கண்கள் திறந்தன.

இதை அறிந்த உறவினர் அதிர்ச்சி அடைந்து சிவாவின் உடலை அங்கும் இங்குமாக ஆட்டினர். ஓரளவு அவர் மயக்க நிலையில் இருந்து தெளிந்தது போல கண் விழித்தார். உடனடியாக அவரை மதுரை அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது சகஜ நிலைக்கு வந்துள்ளார். நான் செத்து புழைச்சவன்டா..எமனை பார்த்து சிரிச்சவன்டா... என்பது போல உறவினர்களை கண்டு சிவா மகிழ்ச்சி அடைந்துள்ளார். உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்து அரசு டாக்டர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவாவின் உறவினர் ஒருவர் கூறும் போது, சிவாவுக்கு திடீர் என காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தால் உடனடியாக குணமாகி வேலைக்கு செல்லலாம் என கருதி சேர்த்தோம். ஆனால் சாதாரண காய்ச்சலுக்கு 17 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல் சிகிச்சை கட்டணமாக ரூ.1 1/2 லட்சம் வரை வாங்கி விட்டார்கள். இறந்து விட்டதாக கருதி இறுதி சடங்கு ஏற்பாடு செய்த போதுதான் திடீர் என சிவா கண் விழித்தார். அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த பின்னர் தற்போது நன்றாக உள்ளார். தனியார் ஆஸ்பத்திரியில் பணத்தை குறி வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment